கமல் பிக் பாஸ்-கு ஓ.கே. சொன்னதற்கான காரணம் இதுதானா??

கமல் பிக் பாஸ்-கு ஓ.கே. சொன்னதற்கான காரணம் இதுதானா??
இந்தியாவில், கிடைக்கும் பொது தளங்களை பிரச்சார மேடையாக்கி அதன் மூலம் பெருவாரியான மக்களிடம் கருத்துப் பிரச்சாரத்தை கொண்டு செல்லும் உத்தியைத் தொடங்கியவர்கள் இடது சாரிகள்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்ட இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் கம்யூனிச, சோசலிச கருத்துக்களை பிரச்சாரம் மூலம் கொண்டு சென்றனர். காங்கிரஸ் கட்சிக்குள் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு எதிராக வலதுசாரி தத்துவார்த்தம் தலைதூக்கிய போதெல்லாம் அதனை இவர்கள் முறியடித்தனர்.
சுதந்திர போராட்ட தலைவர்கள், தொண்டர்கள் அடுத்த கட்ட போராட்டம் பற்றி கூடி முடிவெடுக்க இயலாத அசாதாரணமான அடக்கு முறை நிலவிய போது மும்பையில் விநாயக சதுர்த்தி விழாவை நடத்தி அதில் சுதந்திர போராட்ட வீரர்கள் கூடி விவாதித்து முடிவெடுக்க வழிவகுத்தார் பாலகங்காதர திலகர்.
இந்தியாவில் அவசர நிலையை இந்திரா காந்தி கொண்டு வந்த போது பேச்சு உரிமை, எழுத்து சுதந்திரம் தடை செய்யப்பட்ட நிலையில் தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு திருமண விழாக்களை பயன்படுத்தினார் தி மு க தலைவர் கருணாநிதி.
தி மு க தலைவர் கருணாநிதி மேம்பால ஊழல் வழக்கில் ஜெயலலிதா அரசால் நள்ளிரவில் அத்துமீறி கைது நடவடிக்கையில் ஈடுபட்டதை அச்சமின்றி கண்டித்த கமலஹாசன், அன்றில் இருந்து அரசியல் விமர்சனங்களை செய்து வருகிறார். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைக்கு கமல் ஹாசனின் அரசியல் விமர்சனங்களுக்கு எளிதாக பாதை அமைத்து கொடுத்திருக்கிறது.
அறிக்கை இல்லை, பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை. டுவிட்டரில் 140 வார்த்தைகளில் அரசியல் வாணவேடிக்கையை தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்.
பொது வெளியில் கடும் விமர்சனத்துக்கும், ஏளனத்துக்கும் உள்ளான பிக்பாஸ் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் கமல் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கும் நாட்களில் அரசியல் பேசுகிறார்.
பொதுக் கூட்டம் நடத்தாமலே கோடிக்கணக்கான மக்களிடம் நீட் தேர்வுக்கு எதிராக மக்களை திரளச் செய்யும் கருத்துக்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அழுத்தமாகப் பதிவு செய்தார் கமலஹாசன்.
கல்வி என்பது மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் சார்ந்து இருக்க வேண்டும். என் மாநில மக்களின் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் அதில் தலையிட மத்திய அரசுக்கு உரிமையில்லை என்பதையும் அந்த மேடையில் சொன்னார்.
அவசர நிலை சட்டத்தை இந்தியாவில் இந்திரா காந்தி அமுல்படுத்திய காலத்தில் மாநில உரிமைகள் பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசு தனது அதிகார பட்டியலுக்கு மாற்றியதை திரும்பப் பெற மாநில சுயாட்சி பேசுவோர் முயற்சிக்க வேண்டும் என திராவிட இயக்கங்களை சுட்டிக் காட்டவும் கமலஹாசன் தவறவில்லை.
விரைவில் தேர்தல் வரலாம் மூளையை சுத்தமாக வைத்து கரன்சிக்கு கை விரல்களில் மை வைக்காமல் நல்லவர்களை தேர்ந்தெடுக்க கை விரல்களை பயன்படுத்துங்கள் என்றார் முத்தாய்ப்பாக. லட்சம் பேரை ஓரிடத்தில் திரட்டி பொதுக் கூட்டம் நடத்த ஒரு மாத காலம் தேவைப்படுகிறது அரசியல் கட்சிகளுக்கு. இதில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் பெரும்பான்மை தமிழ் மக்களிடம் நீட் தேர்வு முறைக்கு எதிரான தனது அரசியல் கருத்துக்களை ‘நீட்டாக’ கொண்டு சேர்த்திருக்கிறார் கமல்ஹாசன்.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்