விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் வீட்டை காலி செய்! - அத்துமீறும் காவல்துறை



நெல்லை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை போலீஸார் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள்  குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்களை மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றச் சொல்வதாகவும்  போலீஸார் மீது எழுந்துள்ள பரபரப்புப் புகார் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

''அரசியல் அமைப்பைப் பேணிக்காப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும்!'' - ராம்நாத் கோவிந்த்

வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களின் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் என ஜனநாயக ரீதியில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முன் அனுமதி பெற்று இந்த வகையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு போலீஸார் தொந்தரவு கொடுப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது.

நெல்லையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை போலீஸார் தொந்தரவு செய்வதாக தற்போது புகார் எழுந்துள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளரான மு.ரா.ஆதி என்பவர் இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர், மாநில மனித உரிமை ஆணையர், மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். போலீஸாரின் மிரட்டலால் பாதிக்கப்பட்ட முருகன் என்பவரும் இதே போல தனியாகப் புகார் செய்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் மு.ரா.ஆதியிடம் கேட்டதற்கு, ''மக்களின் பிரச்னைகள் மற்றும் உரிமைகளுக்காக எங்களது அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக நாங்கள் உரிய அனுமதியுடன் ஜனநாயக முறைப்படி போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே எங்களுடைய செயல்பாடு இருக்கிறது.

கடந்த 3-ம் தேதி நாங்கள் நெல்லையில் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, ‘விவசாயிகளை வாழவிடு’ என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்தினோம். 200 பேர் அதில் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசின் கடமைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசி பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினோம். இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை க்யூ பிரிவு போலீஸார் தற்போது மிரட்டி வருகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் அவர்களை மிரட்டுவதுடன், அவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் அந்த வீட்டின் உரிமையாளரை மிரட்டி வீட்டைக் காலி செய்ய வைக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். தினமும் போலீஸார் வந்து, வீட்டு உரிமையாளரை மிரட்டுவதால், அவர்களும் வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். இதனால் சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களை அவர்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பிரின்சிபாலைப் பார்த்துப் பேசி மிரட்டல் விடுக்கிறார்கள்.

காவல்துறையினரின் இந்தச் செயல் கண்டனத்துக்கு உரியது. சட்டத்துக்கு உட்பட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு போலீஸார் இது போல நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதிகாரிகளின் ஆலோசனைப்படி போலீஸார் இப்படி நடந்து கொள்கிறார்களா... என்பது தெரியவில்லை. அதனால்தான் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் செய்துள்ளோம். அத்துடன், மனித உரிமை ஆணையம், மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆகியவற்றிலும் புகார் செய்து இருக்கிறோம்” என்று படபடத்தார்.

போலீஸாரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட முருகன் என்பவரிடம் பேசியபோது, ''எனக்கு ஆலங்குளம் சொந்த ஊர். நான் கூலி வேலை செய்து வருகிறேன். விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட என்னைத் தேடி மோகன் என்ற க்யூ பிராஞ்ச் போலீஸ்காரர் எங்க வீட்டுக்கு வந்தார். குடும்பத்தினரை மிரட்டிய அவர் என்னிடம், ‘இனி மேல் மக்கள் அதிகாரம் நடத்தும் கூட்டத்துக்குப் போகாதே. அங்கே போகாமல் இருந்தால் உனக்குத் தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்யுறேன்' என்றார். நான் அவர் சொன்னதைக் கேட்க மறுத்துவிட்டேன்.

அதனால் அத்திரம் அடைந்த அவர் மறுநாளில் இருந்து தினமும் நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரை மிரட்டி வருகிறார். அதனால் என்னை வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் சொல்லிவிட்டார். என்னைப் போலவே பலரையும் க்யூ பிராஞ்ச் போலீஸார் மிரட்டி வருகிறார்கள். போலீஸாரின் நடவடிக்கை எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் புகார் செய்துள்ளேன்” என்றார். இந்த இவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்