Tamil latest news

சென்னை:

எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கத் துறையின் மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் தற்பொழுது மின் உற்பத்தியில் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் மின்நிலைமையை மேலும் மேம்படுத்தி அம்மா அவர்களின் தொலைநோக்குப் பார்வை 2023-ன்படி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிட தங்களது தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த சில வருடங்களில், மாநிலத்தின் எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க கூடுதல் மின்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநிலம் 2016-17 ஆம் நிதியாண்டில் மின் உற்பத்தியில் உச்ச உபரி நிலை அடைந்துள்ளது. மேலும், இனிவரும் வருடங்களிலும் மின் உற்பத்தியில் உபரி நிலை தொடர போதுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டில் 200 மில்லியன் யூனிட்டாக இருந்த ஒரு நாளைய சராசரி மின் நுகர்வு 2016 ஆம் ஆண்டில் 300 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த மின் நுகர்வு உயர வாய்ப்பு உள்ளது. மாநிலத்தின் தற்போதைய பூர்த்தி செய்யப்பட்ட மின்தேவை ஏறக்குறைய 13,500 மெகாவாட் முதல் 14,500 மெகாவாட்டாக உள்ளது. இது 15,500 மெகாவாட்டாக மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் தேவையை பூர்த்தி செய்ய ஏற்றவாறு தமிழகம் தயார் நிலையில் உள்ளது.
தமிழகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கின்றது. மேலும் இந்த இடத்தை தக்கவைப்பதற்கான அனைத்து முனைப்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் மொத்த சூரியஒளி மின் சக்தி நிறுவுதிறன் 1693 மெகாவாட் மற்றும் காற்றாலை மின் நிறுவுதிறன்7845 மெகாவாட் ஆகும். 

தமிழ்நாட்டின், காற்றாலை மின் நிறுவுதிறனானது இந்தியாவின் மொத்த காற்றாலை மின் நிறுவுதிறனில் 28 விழுக்காடு ஆகும். தமிழ்நாட்டில் மேலும் 4500 மெகாவாட் காற்றாலை மற்றும் 4500 மெகாவாட் சூரியஒளி மின் திட்டங்களை வருகின்ற வருடங்களில் படிப்படியாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2016-17 ஆம் ஆண்டில் தமிழ்நாடு எப்பொழுதும் இல்லாத அளவாக சுமார் 13000 மில்லியன் யூனிட் அளவு காற்றாலை மின்சாரத்தையும், 1644 மில்லியன் யூனிட் அளவு சூரியஒளி மின்சாரத்தையும் உற்பத்தி செய்துள்ளது.

தமிழ்நாடு, தற்பொழுது மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் நியமத்தை பூர்த்தி செய்து, வெளி மாநிலங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் நியமம் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக சுமார் 1,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்யும் நிலையில் உள்ளது.

சென்ற வருடம் தமிழ்நாடு சுமார் 120 மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் உபரி காற்றாலை மின்சாரம் தேவைப்படும் மாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக தனிப்பயன் பசுமை மின் வழித்தடத்தை விரைவில் செயல்படுத்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் 
அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகுகள் 1 மற்றும் 2-ன் மொத்த மின் நிறுவுதிறனான 2000 மெகாவாட்டில் 1125 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 3வது மற்றும் 4வது அலகிற்கான அடிக்கல்லை பாரத பிரதமர் 15.10.2016 அன்று ஏற்கனவே நாட்டியுள்ளார். மாநில அரசு கூடங்குளம் அணுமின் நிலையமானது சுமூகமாக மின் உற்பத்தியை தொடங்க எடுத்த தீவிர முயற்சிகளையும், அணுமின் நிலையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளதால் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதையும் கருத்திற்கொண்டு அலகுகள் 3 மற்றும் 4-ன் மொத்த மின் உற்பத்தியான 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மின்சாரத் தேவை அதிகரித்துக் கொண்டே வருவதால் செய்யூர் மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளி ஏலமுறையை விரைந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். செய்யூர் மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் ஆவணங்களை 100 சதவீத உள்நாட்டு நிலக்கரியை உபயோகப்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்க மத்திய மின் அமைச்சகத்தை அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்வதுடன், இந்த திட்டத்திற்காக மட்டும் தனி ஒரு நிலக்கரி சுரங்கத்தையும் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளர் விக்ரம் கபூர் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலான்மை இயக்குநர் முனைவர் எம். சாய் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்